Tuesday, May 20, 2014

வீரபாண்டித்திருவிழா
-------------------------------------

சித்திரை தான் பொறந்தாச்சு, காப்பும் தோரணமும் கட்டியாச்சு,

எங்க ஊருத் திருவிழா தடைபுடலா தொடங்கியாச்சு,

இரண்டாவது தீவாவளி எங்களுக்கு அரம்பிச்சாச்சு,

எட்டு நாளுத் திருவிழா, திக்கெட்டும் பெருவிழா,

கௌமாரியம்மன் அருள் பெற முட்டிமோதும் எம் ஜனம்,

மழையினிலே ஏந்தி வரும் தீச்சட்டிகளும், காவடிகளும்,

மாரியம்மன் தேரைப் பார்த்து ஒவ்வொரு முறையும் வியந்து தான் போயாச்சு !

நெற்றியிலே என் தாய் வைக்கும் மாவிலக்கின் சூடின்னும் குறையலையே !

ஒரு வருடம் காத்திருந்து தண்ணித் துப்பாக்கியும் வாங்கியாச்சு,

ரோடெல்லாம் கடைகள், "வக்காலி, உப்பார்பட்டி வரைக்கும்
கடை இருக்கும் போல இருக்கே", மலைத்து தான் போயாச்சு,

ஜாடை காட்டிச் சென்ற பெண் பின்னால்
திருவிழா எங்கும் அலைந்தும் தான் பாத்தாச்சு,
அவள் முறைப் பையன் முறைத்து முறைத்து தொறத்தியும் விட்டாச்சு,

பனைக்கரமும், நீர் மோரும், பீம புஷ்ட்டி அல்வாவும்,
நுங்கும் இதர பழங்களையும் தின்னுந்தான் போட்டாச்சு,

இந்த வாட்டி புதுசா என்ன ராட்டினம் தான் வந்திருக்கு,
நானும் என் குட்டித் தங்கச்சியும் தேடித்தான் அலுத்தாச்சு?

43,44,45 முல்லை ஆற்றின் பாலத்திலிருந்து தண்ணிக்குள்ளே
நாங்கள் குதிப்பதை எண்ணி எண்ணி என் நண்பன் களைத்தும் தான் போயாச்சு,

எங்க ஊருத் திருவிழா தடைபுடலா தொடங்கியாச்சு,

முகநூலில் யாரோ போடும் திருவிழாவின் படத்தைப் பார்த்து,
அயல் நாட்டு மண்ணிலே மனதும் தான் கணத்தாச்சு

No comments:

Post a Comment